மாத்தி யோசியுங்கள் சிறீதரன் அவர்களே!

e
e

கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பி சாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமது உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும் சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில் வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை.


இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பல அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உண்மையில் கட்சியின் நலன், எதிர்காலத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டிய தேவை, இவையெல்லாவற்றையும் விட இனத்தின் நன்மையை கருதுபவராக இருந்தால் சிறீதரன் கட்சியின் செயலாளராக வரவேண்டும் என்றுதான் சாணக்கியனுக்கு சொல்லியிருப்பார்.


முதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ஒருவரை தடுப்பிலிருந்து வந்த ஒரு முன்னாள் போராளி சந்தித்தார். அவரிடம் “சம்பந்தன் ஐயா போல ஆட்கள் இப்படியே தொடர்ந்து இழுபட்டுக்கொண்டிருக்காமல் அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும். இப்ப நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறன். இன்னும் ஒருநாடாளுமன்ற உறுப்பினரானதுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டன். அடுத்தவர்கள் வர வழிவிடுவேன்” என்றார். இதனைக் கேட்ட அந்தப் போராளி புன்னகைத்துக்கொண்டார்.

ஒரு உரையாடலின் போது “பதவியை விடத் தயார்;தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமேயொழிய ஒரு நாளும் அதை விடக்கூடாது” என்று திரு.அமிர்தலிங்கம் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார் வே.பிரபாகரன். ஏதோ தெரியவில்லை அந்த நேரம் பார்த்து இந்த விடயம் நினைவுக்கு வந்தது . இன்று கிழக்கில் கட்சியை யாரிடம் ஒப்படைத்திருக்கிறார் மாவை ? ஒரு கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு விருப்பு வாக்கில் இறுதி இடத்தைப் பெற்றுக்கொண்ட பொன். செல்வராஜாவிடம் 2013ல் தனது பாட்டனார் சி.மு இராசமாணிக்கத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட விருந்த நிதியத்தின் நிகழ்வுக்கு சம்பந்தன் ஐயாவை அழைத்திருந்தார் சாணக்கியன். சம்பந்தன் ஐயாவின் வருகை செல்வராஜாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. தொலைபேசியில் சாணக்கியனைஅழைத்து 2020 வரை அரசியலுக்கு வரும் எண்ணம் வரக்கூடாது என எச்சரித்தார்.

இது சம்பந்தமாக மாவையை நேரில் சந்தித்துக் கூறினார் சாணக்கியன்.எப்போது தான் மாவை தனது ஆளுமையை நிரூபித்து காட்டியுள்ளார் ? வளவளா பதில்தான்.


இக் கால காலகட்டத்தில் தான்அருண் தம்பிமுத்து தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு சாணக்கியனை அழைத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்..அரசியலில் களமிறங்கினார்..அவ்வருடம் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வில் சாணக்கியன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 24.இது நாள் வரை தமிழரின் விடுதலைப்போராட்டம் அரச பயங்கர வாதத்தின் விளைவுகள் பற்றியெல்லாம் எதுவுமே அவருக்குத் தெரியாது. துயிலுமில்லத்தில் கண்ட அபூர்வமான காட்சிகள் அவரை உலுப்பின. அந்த வித்தியாசமான உணர்வலைகள் பற்றி கனவிலும் அவர் அறிந்ததில்லை. தான் எங்கே நிற்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்.

அருண் தம்பிமுத்துவின் கட்சியிலிருந்து விலகினார்.அவரைப் பொறுத்தவரை அது ஒரு அரசியல் விபத்து. இத் தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது.


தந்தை செல்வாவுடன் பழகிய கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர் பேரவைக் காரரும் பின்னாளில் ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவருமான பாசி அல்லது யோகன் பாதர் எனப்படும் பாலிப்போடி சின்னத்துரையை தனது இல்லத்துக்கு வரவழைத்து கலந்துரையாடினார் சம்பந்தன் ஐயா. உடனே மாவையும் இன்னுமொரு முக்கிய புள்ளியும் புலிகள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டியவர்கள் அல்ல ; அவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான் வைக்கவேண்டும் எனத் தமது பலத்த ஆட்சேபனையை த் தெரிவித்தனர்.(ஆனால் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகளின் வாக்குகள் மட்டும் வேண்டும்) தமிழ் இளைஞர் அரசியலில் தன்னை விட யாருக்கும் வரலாறு இருக்கக் கூடாது என்பது மாவையின் நிலைப்பாடு. எப்படி அவர் பாலிப்போடி சின்னத்துரையை ஏற்றுக்கொள்வார்? புதிய சுதந்திரனும் மாவையையே சுற்றிச் சுற்றி வரலாறு எழுதியது.


இந் நிலையில் யோகன் பாதரும் சாணக்கியனும் சந்தித்துக் கொண்டனர். சாணக்கியனுக்கு முழுமையான ஆதரவளிக்க முடிவெடுத்தார் யோகன் பாதர். சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியமை தொடர்பாக பொன்.செல்வராஜா அதிருப்தி வெளியிட்டார். அருண் தம்பிமுத்துவுடன் சிலகாலம் இணைந்து செயற்பட்டவர்என்று குற்றஞ்சாட்டினார்.இதற்கு நீங்கள் எல்லாம் முன்பு எங்கேயிருந்தீர்கள்? என்று கேட்கப்பட்டதும் பதில் சொல்ல முடியவில்லை பொன்.செல்வராஜாவினால் .(1977 தேர்தலில் கணேசலிங்கம் போட்டியிட்போதே செல்வராஜாவின் உடலில் தேசியக் காற்றுப்பட்டது. கணேசலிங்கம் வெற்றி பெற்ற பின் அவரது கோவை தூக்குபவராகத் திரிந்தார். அதற்கு முன் இவர் தம்பிராஜாவின் ஆதரவாளர். 1970 தேர்தலில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்டு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியவர் தம்பிராஜா ) இந் நிலையில் சாணக்கியன் சிங்களத்தியின் மகன் என்ற கதையை தமிழரசுக் கட்சியினரே அவிழ்த்து விட்டனர். எல்லோருடைய சதியையும் தாண்டி 33332 விருப்பு வாக்குகளை பெற்றார் சாணக்கியன். அரசுத் தரப்பில் பிள்ளையானை,வியாழேந்திரனை வெல்ல வைப்பதற்காக சாத்தியமான சகல விடயங்களும் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தலின் பின்னர் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உள் வீட்டுக் குழப்பங்களையடுத்து செயலர் ராஜினாமா செய்யவேண்டியேற்பட்டது. இந் நிலையில் புதிய செயலாளராக கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான பாலிப்போடி சின்னத்துரையை தெரிவு செய்வதே நல்லது என மாவைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. பிள்ளையான்,கருணாவை எதிர்கொள்வதற்கு சின்னத்துரையே பொருத்தமானவர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது சின்னப்பிள்ளைத்தனமாக மாவை ஒரு கேள்வி கேட்டார். “அது சரி இவர்கள் போன்றோரெல்லாம் இருக்கும் போது பிள்ளையான் எப்படி இவ்வளவு வாக்குகள்( 54108) பெற்றார்” என்று. முதலில் தனது நிலையை அவர் உணரவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தான் இருக்கத்தக்கதாக அங்கஜன் எப்படி 36895 வாக்குகளை பெற்றார் என்று யோசித்திருந்தால் இவ்வாறான கேள்வியெழுந்திருக்காது.

உண்மையில் புலிகளை மட்டுமல்ல புலிகள் சார்பானோரும் நிர்வாகப் பதவியில் அமர்வதை அவரால் சகிக்க முடியாது. மக்கள் பிரதிநிதியாக இவர் தெரிவாகும் முன்னரே 1970 களில் யாழ். மாநகர உறுப்பினராக விளங்கியவர் சொலமன் சூ சிறில். (இராஜா விஸ்வநாதன் மேயராக இருக்கும்போதே).இன்றுள்ள மாநகர சபை உறுப்பினர்களில் இவரே சீனியர். இரு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆர்னோல்ட்டை மேயர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்த்தே வாக்களிப்போம் என்று EPDP தெளிவாக அறிவித்து விட்டது. எண்ணத் தெரியாத ஒருவரா தமிழரசுக் கட்சித் தலைவர் ? இல்லை நன்றாகவே தெரியும். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு சகுனப் பிழை ஏற்பட வேண்டும் என்று எண்ணித்தான் சொலமன் சூ சிறிலை மேயர் வேட்பாளராக அறிவிக்காமல் விட்டார். எப்படியோ புலிகள் சர்பானோரை மேயர் பதவியில் அமர விடாமல் செய்தாயிற்று என்று பூரணமனத் திருத்தியுடன் அன்று தூக்கத்துக்குச் சென்றிருப்பார். மணிவண்ணனை மேயராக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்காது என்றும் சொல்ல முடியாது.இந் நிலையில் தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக் காரரான பாலிப்போடி சின்னத்துரையை செயலாளராக்க எப்படி சம்மதிப்பார் மாவை ?
இந் நிலையில் கட்சியை இளைஞர் மத்தியில் கொண்டுசெல்லவும், மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பாதைக்கு வழிவகுக்கவும் சுயநலமின்றிச் சிந்திப்பவராக இருந்தால் சாணக்கியனைக் கட்சி செயலாளராக்க வேண்டும் என்று அடுத்த செயற் குழுக் கூட்டத் திலோ பொதுச் சபையிலோ வலியுறுத்த முனைவாரா சிறீதரன் ? பாலிப்போடி சின்னத்துரையைத்தான் மாவையால் நிராகரிக்க முடியுமே தவிர சாணக்கியன் விடயத்தில் அவரால் எதுவும் கூறமுடியாது. தார்மீக ரீதியில் செயலர் பதவி மட்டக்களப்புக்குத்தான். இதனை கட்சித் துணைத் தலைவரான சி. வி.கே சிவஞானம் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.


கட்சிச் செயலர் பதவியில் இன்னொருவரும் கண் வைத்துள்ளார்.”பயங்கரவாதத்தை அழித்த இந்த அரசாங்கத்துக்கு விசர் நாய்களைக் கொல்வது என்பது கஸ்ரமான செயலல்ல “யூன் மாதம் 9ம் திகதி 2011 ஆண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆற்றிய உரை இது. நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து வெளியிடும் அரசின் ஹன்சாட்டில் பக்கம் 1336 இல் இவ் விடயம் காணப்படுகிறது.விலங்குகள் நலச் சட்டம் மீதான விவாதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுவதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ரசிக்கலாம் மாவை. இது அரியநேந்திரனுக்கான சிறப்புத் தகுதியெனவும் கருதலாம்.ஆனால் இதனை சிறீதரன் ஏற்க மாட்டார் என்றே நாம் நம்புகின்றோம்.


இதே வேளை கட்சிரீதியாக துணிச்சலுடன் செயலாற்றும் தகுதி சாணக்கியனுக்கு உண்டுதான். ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு அவருக்கு எதுவுமே தெரியாது. தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவருடன் கூட இருந்த சிலர் இன்றும் பார்வையாளர்களாக அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சாணக்கியன் பிறந்திருக்க வில்லை இத்தனை வருடத்தில் சந்தித்த வேதனைகள், வலிகள் அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியும் ,ஆயுதமும் புகலிடமும் வழங்கியது. பின்னர் ஸ்ரீலங்கா சார்பில் தமிழர் மீது போர் தொடுத்தது இந்தியாவை இந்த மண்ணிலிருந்து விரட்ட என்னென்ன செய்யவேண்டுமோ அதனைப் புலிகள் செய்தனர். எனவேவரலாறு எந்தக் கட்டத்திலும் எப்படியும் மாறலாம்; இதற்கு ஆண்டுக்கணக்கில்லை என்ற விடயங்களை ஸ்ரீதரனும் யோகன் பாதரும் சாணக்கியனுக்கு விளக்க வேண்டும் . முற்கற்பிதங்கள் தேவையில்லை


எனவே கட்சிச் செயலாளராக சாணக்கியனை நியமிக்கவேண்டும் என ஏனையவர்களை வலியுறுத்தும் பணியை அவர் விரைந்து மேற் கொள்ளவேண்டும். முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற சர்சைகளை நிறுத்துமாறு சம்பந்தன் ஐயாவும் சொல்லிவிட்டார். எனவே கட்சியின் நலன் கருதி சாணக்கியனை செயலாளராக்க முனைவார் சிறீதரன் என நம்புகிறோம்.

அவதானி