அம்பிகாதான் தமிழருக்கான கூட்டமைப்பின் மகளீர் தினப் பரிசா?

Aasiriyar paarvai 1
Aasiriyar paarvai 1

இந்த உலகத்தை பெண்கள்தான் சிருஷ்டிக்கின்றனர். பெண்தான் தாய்மொழியை கற்றுக்கொடுக்கிறாள். பெண்தான் தலைமுறைகளை தொடர்பு செய்கிறாள். பெண்ணில்லாத வாழ்வு என்பது ஒரு சமூகத்தின் அழிவாகவும் முடிவாகவும் ஆகிவிடுகிறது. பெண்ணில்லாத வீடு இருண்டு விடும். ஈழம் போன்ற தேசங்களும் பெண் மையத் தேசங்கள்தான். அதிலும் ஈழ விடுதலைப் போராட்டப் பின்னணியில் ஈழம் பெண்களால் ஆனது.

பெண்களுக்குரிய தினங்களில் அவர்கள் போற்றிப் பேசப்படுவதும், அந்த நாள் முடிந்துபோனதும் அவர்களின் உரிமை, விடுதலை, வாழ்வு எல்லாமே மறுக்கப்படுவதும் காலம் காலமாக நாம் காண்பதுதான். பெண்களுக்கு சமமானமான வாழ்க்கை பற்றி மேலைத் தேயத்திலிருந்து கீழைத் தேயம் வரையில் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் தமது நடைமுறை வாழ்வில் அதற்கு என்ன செய்தார்கள் என்பதே பெரும் கேள்வி.

ஈழம் பெண்கள் விடயத்தில் மிகவும் முன்னூதாரணமான மண். புலிப் போராளிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பெண் போராளிகள் அனைத்து வித சாத்தியங்களையும் சாதனைகளாக்கி இருந்தார்கள். தலை சிறந்த பெண் போராளிகளை வரலாறு அறிந்து கொண்டது. தலை சிறந்த பெண் போராளித் தளபதிகளை வரலாறு அறிந்து கொண்டது. கரும்புலித் தாக்குதல் போன்ற வீரங்களில் பெண்கள் தம்மை ஈடுபடுத்தினர்.

சமூகத்தின் அத்தனை செயற்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுகின்ற சூழல் விடுதலைப் போராட்ட காலத்தில் சாத்தியமானது. தலைமைத்துவம், நிர்வாகம் என பெண்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தை விடுதலைப் போராட்ட காலத்தில் கண்டிருந்தோம். பெண்களுக்கு இருந்த இயல்பான ஆளுமையை இந்த உலகம் அறியத் செய்தவர் எமது தலைவர். உலகமே பெண்ணாளுமை கண்டு வியந்திருந்த காலமது.

பெண் இந்த உலகை படைக்கிறாள். அவள்தான் ஒரு இனத்தின் வேராகவும் செடியாகவும் இருக்கிறாள். தன்னிலிருந்து புதிய விதைகளை முளைக்கச் செய்து சந்ததிகளின் தாயாக இருக்கிறாள். இதனால் பெண்ணைதான் இன அழிப்பாளர்கள் இலக்கு வைக்கின்றனர். ஈழத்தில் போருக்குப் பிந்தைய சூழலில் பெண்கள் அப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதிலிருந்து, நுண்கடன்களால் பெண்கள் இலக்கு வைக்கப்படுவதிலிருந்து, பெருந்தொழிற்சாலைகளில் தம்மை உருக்கி வேலை செய்வதிலிருந்து, இராணுவ சிவில் உத்தியோகத்தர்களாக தம் வாழ்வை மாற்றுவதிலிருந்து பல இடங்களில் பெண்கள் பலியாவதையும் பலியாக்கப்படுவதையும் பெண்கள் தொலைக்கப்படுவதையும் ஈழம் கண்டு வருகின்றது.

நுண்கடன் காரணமாக சுமார் இரு நூறு பெண்கள் வரையில் வடக்கு கிழக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அண்மைய நாட்களில்கூட பாலியல் லஞ்சம் கோரியதால் நுண்கடன் பெற்ற பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் தாயகத்தில் நடந்தது. இது போரின் பின்னர் முடிவற்ற துயராய் தொடர்கின்றது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையை தேடிய தாயொருத்தி, அண்மையில் காலமாகினார். இதுவரையில் பதினாறு பேர் வரையில் தமது பிள்ளைகளை தேடித் தேடியே உயிர் நீத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. எமது தாய்மார்களின் வாழ்க்கை என்பது தெருக்களில் கழிந்தழிகிறது. வெயிலிலும் பனியிலும் மழையிலும் பிள்ளைகளைத் தேடி அலைந்தே அவர்கள் செத்தொழியும்படி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் முடங்கிவிடவில்லை. இன்றைக்கு ஐ.நா வரை சென்று தம் பிள்ளைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்றனர். ஈழத்து அன்னையர்களின் நெஞ்சுரமும் உறுதியும் வியக்கத் தக்கது. இன்றைக்கும் போரின் அநீதிக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான். போராளிகள் ஆயுதம் ஏந்தி இம் மண்ணின் நீதியை கோரியதுபோல தம் குரலால் அவர்கள் நீதியை கோரி உலகை உலுப்புகிறார்கள்.

எமது தலைமைகள் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்த வேளையிலும் அரசியல் தெளிவோடு அவர்களின் இலக்கு என்ன? அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை தீர்க்க தரிசனத்தோடு சொன்னார்கள். எம் அன்னையர்கள் சொன்னது பலித்தது. அரசியல்வாதிகள் சொன்னது பொய்த்தது. இப்படி அரசியலில் தோற்றுப்போன தலைமை, இவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு வாழ்வையே போராட்டமாக்கிய அன்னையர்கள் இருக்கையில் கொழும்பில் இருந்து அம்பிகா சற்குணநாதனை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அழைத்து வரவேண்டுமா?

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக இருந்து, காணாமல் ஆக்கப்படுதலுக்கும் இன அழிப்பு போருக்கும் ஆதரவாக செயற்பட்டு, அந்த அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த ஈழப் பெண்களுக்கும் ஈழ அன்னையர்களுக்கும் எதிரானவராக இருந்த அம்பிகாவை, சர்வதேச மகளீர் தின பரிசாக வழங்கியுள்ளது சுமந்திரன் தரப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.
(09.03.2020)