‘காங்கிரஸின் தமிழர் தேசம்’ யாழ்ப்பாணத்திற்குள் சுருங்குகிறதா?

samakaalam 1
samakaalam 1

ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டம் நடந்த மண்ணில், அதிகம் பேசாத, எமது மக்கள் பெரிதாக நேரில் கண்டிராத ஒப்பற்ற தலைவன் மறைவாய் வாழ்ந்த மண்ணில் பதவிகளுக்கும் தலைமைகளுக்கும் அடிபடுகின்ற கேலிக் கூத்துக்களை இப்போது கண்டு வருகிறோம். நடந்து முடிந்த பராளுமன்ற தேர்தலின் பின்னர், கட்சிகள் சில தலைமைப் பதவிகளுக்கும் தேசியப் பட்டியல் பதவிகளுக்கும் பெரும் போர் செய்கின்றன. தமிழ் மக்களின் உரிமையை வெல்லுவதில் இல்லாத உற்சாகத்தை இதில் காண்கிறோம்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தேசியப் பட்டியலுக்கு பெரும் போர்நடந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எஸ். சிறீதரன் சொல்லுகிறார் திருகோணமலைக்கு தேசியப்பட்டியலை தந்தால்தான், அதாவது குகதாசன் என்பவருக்கு கொடுத்தால்தான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சம்பந்தர் கூறினாராம். மிகவும் சிறுபிள்ளைத்தனமான காரணமாகவல்லவா இருக்கிறது?

இது இப்படியிருக்க இன்னுமின்னும் சிறுபிள்ளைத் தனமான காரணங்களுடன், தனது தேசியப் பட்டியலை செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கியிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று அழைக்கப்படுகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி. அகில இலங்கைக்குமான இத் தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்திற்குள் தமிழர் தேசத்தை சுருக்குகிறதா? முன்னணியின் இந்த முடிவானது,  இது ஒரு  யாழ்ப்பாண மையக் கட்சி, யாழ்ப்பணிகளின் கட்சி என்று கடந்த காலங்களில் பலரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

திரு செல்வராசா கஜேந்திரன் கடந்த பத்தாண்டுகளாக கட்சிக்காக பாடுபட்டார் என்றால் அவரை பின் வரும் காலத் தேர்தல்களில் மதிப்பளிக்கும்விதமாக பதவிகளை அளிக்கலாம். வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆக்க முடியும். எதிர்காலத்தில் தமது வெற்றிகளின் வழியாக யாழ் மாநகர மேயராக்க முடியும். ஆனால் கட்சிக்காக பிராயச்சித்தம் பாராமல் உழைத்தார் என்பதற்காக தேசியப் பட்டியலை கொடுக்க வேண்டும் என்றால் ஏன், தேசியப் பட்டியலுக்கான இன்னொரு பட்டியலை தேர்தலின் முன்பு கொடுக்கிறீர்கள்?

ஒரு நாடு இரு தேசம், ஒரு நாட்டுக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் என்று பேசிக்கொண்டுள்ள தமிழ் காங்கிரஸ் தனது தேசியப் பட்டியலை மட்டக்களப்புக்கோ, அம்பாறைக்கோ, திருகோணமலைக்கோ, வன்னிக்கோ ஒதுக்கியிருக்க வேண்டும். அதுவே சொல்லுக்கு கொடுக்கின்ற செயல்வடிவ மதிப்பு ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுக் கட்சி என்று சொல்லுகிற தமிழ் காங்கிரஸ் இந்த விடயத்தில் கூட்டமைப்பைவிட பின்னுக்குள் நிற்கின்ற செயலைத்தான் செய்திருக்கிறது.

தவிரவும், கஜேந்திரன் வன்னியிலும் கிழக்கிலும் சில காலம் தங்கியிருந்து அரசியல் பணிகளை செய்வார் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகின்றது. மீண்டும் மீண்டும் அனைவரும் செய்கின்ற தவறையே நீங்களும் செய்கிறீர்கள். கிழக்கிற்கு வடக்கிலிருந்து தலைவர்கள் செல்ல வேண்டும் என்றால், வடக்கு கிழக்கை தெற்கின் சிங்களம் ஆழ்வதில் தவறில்லை என்ற அர்த்தம் ஏற்படுமல்லவா?

அத்துடன் கிழக்கு மாகாணம் மற்றும் வன்னியில் பெற்றுக்கொண்ட வாக்குகளினாலும்தான் தமிழ் காங்கிரஸிற்கு தேசியப் பட்டியல் கிடைத்திருக்கிறது. எனவே அதனை கிழக்கிற்கு ஒதுக்குவதே நீதியானது. வடக்கு கிழக்கு தமிழர் தேசம் என்பதை யாழ்ப்பாணத்திற்குள் சுருக்குகின்ற நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுக் கட்சி என்று சொல்ல எந்த அருகதையும் இல்லை?

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமையின்மையாலேயே, கிழக்கில் தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவத்தில்  இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோனது. எனவே அதனை இட்டு நிரப்பி உங்கள் தமிழ் தேசியப் பற்றை வெளிப்படுத்துங்கள். அதுவெல்லாம் கஷ்டம், ஏற்க மாட்டோம் என்றால் உங்கள் கட்சியின் பெயரை யாழ்ப்பாண காங்கிரஸ் என்றும் யாழ்ப்பாண மக்கள் முன்னணி என்றும் மாற்றி ஒரு நாடு யாழ்ப்பாண தேசம் என்று கொள்கையை அறிவித்துக்கொள்ளுங்கள்.

தமிழ்க் குரலுக்காக

சிரித்திரன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)