உலகை ஈர்த்த விக்கியின் உரை – ஈழத் தமிழர் அபிலாசை

Aasiriyar paarvai 5
Aasiriyar paarvai 5

இலங்கையில் ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவுற்று, கடந்த 20ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுள்ளன. இப் பாராளுமன்ற முதல் அமர்வில் இடம்பெற்ற இரண்டு உரைகள் முக்கிய பேசு பொருளாக அமைகின்றன. அதில் ஒன்று நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆற்றிய ஆட்சிக்கான கொள்கை விளக்க உரை. மற்றையது வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை. இவ் இரண்டு உரைகளின் முக்கியத்துவங்களை ஆராய்வது கால அவசியமாகும்.

புதிய பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாகவும் அது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வகையில் காணப்படும் என்றும் கூறியுள்ளார். எனினும் கடந்த கால வரலாற்றிலும் இத்தகைய தொனிப்பட்ட உரைகளும் அரசியலமைப்பு உருவாக்கங்களும் நடந்திருக்கின்றன என்ற வகையில் ஜனாதிபதியின் உரை புதிய விடயம் ஒன்றை பேசவில்லை என்பதும் கவனிக்கத்தக்க விசயம்.

தவிரவும், இச் சொற்களின் மெய்யான அர்த்தப்பாடு நடைமுறையில் ஏற்பட்டிருந்தார், இனங்களுக்கு இடையில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டிராது என்பது கடந்த காலம் தருகின்ற அனுபவமாகும். நாட்டின் சட்டம் என்பதும் ஆட்சி அதிகாரம் என்பதும் தமிழர்களுக்கு ஒரு விதமாகவும் சிங்கள மக்களுக்கு இன்னொருவிதமாகவும் இருந்து வந்தமையே இலங்கை தீவின் அமைதியின்மைக்கு அடிப்படையான காரணம் ஆகும்.

சிங்கள மக்களுக்கான வாய்ப்புக்களும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுடன் உரிமைகள் மறுக்கப்பட்டன என்ற அடிப்படையில்தான் இந்த தீவில் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் தோற்றப்பட்டது. சிங்கள தேசம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏற்காத போதும் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் அப்போராட்டம் மிகுந்த நியாயமானது. இன்றுவரை அந்த வெளிப்பாடே தூண்டப்படுகின்றது.

புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொலையுடன் தொடர்புடைய ஆயுள் கைதியை தனது பதவியேற்பின் பின்னர் விடுவித்தார். எனினும் எந்தவொரு குற்றமும் செய்யாத பல தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் தவித்தபடி உள்ளனர். இப்படியான நடைமுறைகளே, ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை கேள்விக்கு உள்ளாக்குகின்றது.

அத்துடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசாங்கம், அரசியலமைப்பு வழியாக தமிழ் மக்களிடம் உள்ள எச்சசொச்ச உரிமைகளையும் பறித்துவிடும் என்பதும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முற்று முழுதாக இல்லாமல் செய்கின்ற முயற்சியாக அமைந்துவிடும் என்பதும் இன்று ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் என்பதை இங்கே வெளிப்படையாக பதிவு செய்ய வேண்டும்.

தமிழ் மக்கள் கடந்த அறுபது வருடங்களாக தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். இந்த நாட்டில் தனி நாட்டுக்கான ஒரு போராட்டம் ஏன் ஏற்பட்டது? தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியது ஏன் என்ற வரலாற்று சம்பவங்களை ஆராயாமல், நினைவுபடுத்தினால் சம காலத்தை திட்டமிடுவது என்பது ஒரு ஏமாற்று அரசியலாகவும் பின் விளைவுகளை தருகின்ற சிக்கலாகவும் இருக்கும்.

இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளுவது ஆட்சியாளர்களின் அரசியல் பக்குவமாக அமையும். முள்ளிவாய்க்கால் சம்பவங்களின் பின்னர், கடந்த பத்தாண்டுகளில் தேர்தல்கள் வாயிலாக ஈழத் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் சமஷ்டி தேசத்தில் வாழ வேண்டும் என்பதை வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்த இடத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள் என்பதையும் இந்த தீவின் மூத்த பிரதான மொழி தமிழ் என்பதையும் அவர் அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார். என்ற போதிலும் இன்றைக்கு வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்கள் தமது தனித்துவத்தை பேணி வாழ வேண்டும் என்பதே தமிழர் கோரிக்கை.

இந்த நிலையில் விக்கியின் உரைக்கு எதிராக சில பேரினவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவை இலங்கை அரசாங்கத்தின் மறுப்பாக அல்லது சிங்கள மக்களின் மறுப்பாக அமையாது. எனினும் ஈழத் தமிழ் மக்களின் அடிபடை உரிமையையும் அபிலாசையையும் அங்கீகரித்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தமிழர் தேசத்தின் கோரிக்கையை விக்கியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை உணர்த்துகின்றது.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தேர்வு செய்த தலைவர்கள், தாம் போகும் வழியும் அறியாது, இனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரியாது போன நிலையில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வை, அபிலாசையை அழுத்தம் திருத்தமாக தமிழர் தம் பண்பாட்டு முறையில் எடுத்துரைத்த விக்கியின் உரை இலங்கையில் மாத்திரமின்றி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது வரலாற்றில் பிழைத்துவிட்ட நிலையில், புதிய அரசியலமைப்பு என்பது தமிழர்களின் குரலை உள்ளடக்கினால்தான் புதிதாக அமையும் என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியுள்ள விக்கியின் குரல், தமிழ் தேசிய அரசியலில் புதிய நம்பிக்கையாக வெளிச்சமாக அமைந்துள்ளமை காலச் சிறப்பாகும்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்

22.08.2020