தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் ?

samakaalam 4
samakaalam 4

பகுதி 1

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலானது, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் மாறிவிடுவார்கள் அத்துடன் உங்களை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தி. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல்வேறு கணிப்புக்களும், பலவாறான எதிர்பார்ப்புக்களும் உலவியது. சிலர் என்ன இருந்தாலும் இறுதியில் எங்களுடைய மக்கள் – வீட்டுச் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றவாறான ஆருடங்களை கூறினர். இன்னும் சிலரோ இம்முறை தமிழ்த் தேசிய மாற்றுத்தரப்பினர் கணிசமான வெற்றியை காண்பிப்பர் என்றனர். குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் வடக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தகு வெற்றியை பெறுவர் என்றும் கணிக்கப்பட்டது. அதே போன்று இன்னும் சிலரோ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் அதிக ஆசனங்களை பெறுவர் என்றனர். ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை. அனைவரது கணிப்பையும் பரிகசிக்கும் வகையிலேயே முடிவுகள் அமைந்திருக்கின்றன. 

தமிழ்த் தேசிய அரங்கில் துரோகிகளாகவும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களாகவும் நோக்கப்பட்ட, பிள்ளையான் மற்றும் கருணா போன்றவர்களின் மக்கள் செல்வாக்கு தமிழ்த் தேசியத்திற்கான அபாய எச்சரிக்கையாகவே அமைந்திருக்கின்றன. யோசப் பரராஐசிங்கம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் இருக்கின்ற பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றிருப்பதை ஒரு சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எடுத்துக்கொள்ளவும் கூடாது. அதே போன்று தமிழ்த் தேசிய அரசியலின் மையமாக திகழும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஐன் ராமநாதன் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று, வெற்றிபெற்றிருப்பதானது, தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாங்களே என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அனைவரது முகத்திலும் பூசப்பட்ட கரியாகும். இதனை இவர்கள் எவ்வாறு துடைக்கப் போகின்றனர்? அதிலும் தமிழ்த் தேசியத்தின் கோட்டையான உடுப்பிட்டித் தொகுதியில் அங்கஐன் ராமநாதன் வெற்றிபெற்றிருக்கின்றார். இவைகள் அனைத்தையும் தொகுத்து பார்க்கும் போது தமிழ்த் தேசிய அரசியல் எதிர்காலம் ஒரு நெருக்கடி நிலைக்குள் சென்றிருப்பதை இனினும் நாம் மூடி மறைப்பதில் பயனில்லை.

ஏன் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது? 2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது, எங்களுக்கு முன்னால் ஒரேயொரு நம்பிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கும் வரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு சுயாதீனமானமான அமைப்பாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் ஒரு அரசியல் பிரிவாகவே கூட்டமைப்பு தொழிற்பட்டிருந்தது. இதனை அனைவரும் அறிவர். இதில் முக்கியமானது – அன்று கூட்டமைப்பில் இணைந்து கொண்ட கட்சிகளான தமிழரசு கட்சி, டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் அனைத்துமே ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட கட்சிகள்தான். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள்தான். விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி தலைமறைவானவர்கள்தான். தமிழரசு கட்சியின் தலைவர்களும் ஒன்றும் சளைத்தவர்களல்லர். அவர்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள்தான். இதன் காரணமாகத்தான் அவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் இராணுவ இலக்கிற்குள் கொண்டுவரப்பட்டனர். இன்று கூட்டமைப்பின் தலைவராக வலம்வரும்  இரா.சம்பந்தன் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, சந்திரிக்காவின் பலத்த பாதுகாப்பில் அடைக்கலம் தேடிய ஒருவர்தான். தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பு கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் (Hit list) வைத்திருந்ததாக அவரே நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அவரை விடுதலைப் புலிகள் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் வைக்குமளவிற்கு சம்பந்தன் பாரதூரமான விடயங்கள் எதனையோ செய்திருக்கின்றார் என்பதுதானே இதன் பொருள். 

ஆனால் இங்கு விடயம் இதுவல்ல. இவ்வாறான பின்னணிகளை கொண்டிருந்தவர்கள் அனைவரும் எவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டனர் –  ஒரு கூட்டமைப்பாக செயற்பட்டனர் என்பதுதான் விடயம். அன்றைய அரசியல் சூழலை கருதில்கொண்டே, தங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் மன்னித்து, ஒன்றுபடுத்தினர். பழையவற்றை முற்றிலுமாக புறம்தள்ளி புதிதாக சிந்தித்தனர். அன்று கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்ட அனைவருக்குமே வேறுபட்ட அரசியல் பின்னணிகள் இருந்தன. வேறுபட்ட வரலாறு இருந்தது. உண்மையில் அவர்களால் ஒருபோதுமே ஒன்றுபட்டு செயற்பட முடியாது ஆனாலும் செயற்பட்டனர். 2009வரையில் பிரச்சினையின்றி பயணித்தனர். அது எவ்வாறு சாத்தியப்பட்டது? விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளுதல் என்னும் அடிப்படையில்தான் இவர்கள் அனைவருமே ஒன்றுபட்டனர். விடுதலைப் புலிகளின் தலைமையில் செயற்பட்டனர். விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிகளாக ஏற்றுக்கொள்வதுதான் இவர்கள் அனைவருக்குமான நிபந்தனையாகவும் இருந்தது. அந்த அடிப்படையில்தான் அன்று கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் 2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில்தான், கூட்டமைப்பு தடுமாறியது. கூடவே தடமும் மாறியது. 

2010 மற்றும் 2015 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பையே மக்கள் முழுமையாக ஆதரித்தனர். ஒரு வகையில் ஏகப்பிரதிநிதிகளாகவே அங்கிகரித்தனர். கூட்டமைப்பையே தமிழ்த் தேசியத்தின் காவலனாக நம்பினர். ஆனால் கடந்த ஐந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பின் செயற்பாடுகள், மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில்தான் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. கூட்டமைப்பின் மீதான அதிருப்திகள் மேலோங்கியிருந்த சூழலை அனைவருமே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். கூட்டமைப்பின் தவறுகளை சுட்டிக் காட்டியே அனைவரும் மக்களிடம் சென்றனர். இதில் தமிழ்த் தேசிய மாற்றுத் தரப்பினருக்கும் – அரசாங்க ஆதரவு தமிழ் கட்சிகளுக்குமிடையில் பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் மாற்றுத் தரப்பினரும் கூட்டமைப்பை விமர்சித்தனர் – அங்கஐன் ராமநாதனும் கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டே மக்களிடம் சென்றார். பிள்ளையான் மற்றும் கருணா தரப்பினர் இதனை கிழக்கில் சிறப்பாக செய்தனர்.

ஏற்கனவே கூட்டமைப்பின் மீது அதிருப்திகொண்டிருந்த மக்களுக்கு முன்னால் அனைருமே தெரிவாகினர். இதனால் அவர்கள் அனைவருக்குமே வாக்களித்தனர். இது மக்களின் பிரச்சினையில்லை. மாறாக, தமிழ்த் தேசிய தரப்பினர் முறையான ஒரு தேர்தல் வியூகத்தை வகுக்காமையின் விளைவாகும். தமிழ்த் தேசிய கட்சிகளும் தங்களுக்குள் விருப்பு வாக்குகளுக்காகவும், கட்சிப் பெருமைகளுக்காகவும் அடிபட்டனர். இதுவும் மக்கள் மத்தியில் எரிச்சலையே ஏற்படுத்தியிருந்தது. கொள்கையில் நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று கூறிக்கொள்வதில் முன்னுக்கு நிக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியினரும் விருப்பு வாக்குகளுக்காக அடிபட்டனர். இதன் விளைவுதான் இன்று மணிவண்ணன் தனியாக செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான் தமிழ்த் தேசிய வாக்கு வங்கி சிதறியது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அணியினர் வெற்றியை பெறமுடிந்தது. நிலைமைகள் சரி செய்யப்படாவிட்டால் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம்.

எனவே இப்போது சில கேள்விகளின் அடிப்படையில் இந்த விடயத்தை நாம் உடனடியாக அணுக வேண்டும். அந்தக் கேள்விகள் …

இதனை எவ்வாறு நிவர்திசெய்வது? பின்னடைவுகளை எவ்வாறு சரி செய்வது? இதற்கான உபாயங்கள் என்ன? இதற்காக தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தியில் செய்யவேண்டிய அடிப்படையான கட்டமைப்புசார் மாற்றங்கள் என்ன? தேர்தல்களின் போது தமிழ்த் தேசிய தரப்புக்கள் எவ்வாறான தந்திரோபாயங்களை கையாளவேண்டும்? 
மேற்படி கேள்விகளுக்கான விடைகளை நாம் தேட வேண்டும். இதுதான் நாம் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான சரியான பாதையை நமக்கு காண்பிக்கும். 

இன்று தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் அடைந்திருக்கும் பின்னடைவானது தற்காலிகமான ஒன்றுதான். இதனையிட்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. ஆனால் நாம் ஒன்றை எப்போதுமே மறந்துவிடக்கூடாது. தற்காலிக பின்னடைவுகளை உரிய தருணத்தில் சரிசெய்யாதுவிட்டால் அதுவே நிரந்தர பின்னடைவாக மாறிவிடும். இதனை கருத்தில்கொண்டுதான் நாம் இப்போது உடனடியாகச் செயற்பட வேண்டியிருக்கின்றது. இதற்கு முதலில் செய்ய வேண்டியது – ஒரு ஆழமான சுயவிமர்சனமாகும். இந்த சுயவிமர்சனத்தின் இலக்கு எவரையும் குற்றம்காண்பதல்ல- மாறாக, குறைபாடுகளை களைந்தால்தான் நம்மால் முன்னோக்கி பயணிக்க முடியும். நாம் எப்போதும் சரியாகத்தான் பயணிக்கின்றோம் என்னும் எண்ணம் எங்களுக்குள் இருந்தால் எங்களால் தவறுகளை – குறைபாடுகளை ஒரு போதுமே களைய முடியாமல் போய்விடும். 

தமிழ்த் தேசிய அரசியல் என்பது மக்களுக்குரியது. அது எந்தவொரு கட்சிக்கும் தனிநபருக்கும் உரியதல்ல. எனவே மக்களின் நலன்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் நிலைமையேற்படும் போது, கட்சிகளையும் தனிநபர்களையும் தூக்கிப்பிடிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. அவ்வாறு நாம் செய்தால் அது மக்களுக்கு எதிரானதாகவே அமையும். சில கட்சிகளும் சில தனிநபர்களும் நமது முன்னோக்கிய அரசியல் பயணத்திற்கு தடையாக இருந்தால், அவர்கள் மீது உரிய தருணத்தில் காத்திரமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டியது அவசியம். அதுவொரு தமிழ்த் தேசியக் கடமையாகும். அந்த வகையில்தான் நாம் சில விடயங்களை இங்கு ஆராயவிருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கானவர்களின் பிரத்தியோகத்தினால் உருப்பெற்று, வளர்ந்த தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டுமாயின், இவ்வாறானதொரு சுயபரிசீலனை கட்டாயம் நமது மக்களுக்குத் தேவை. இதன் அடுத்த பகுதியில் மிகுதி விடயங்களை ஆராய்வோம். 

தொடர்ந்தும் தமிழ் குரலுடன் இணைந்திருங்கள்.

தமிழ்க் குரலுக்காக விதுரன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)