குளத்தினுள் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை நிறுத்த கோரியும் நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை-குளத்தினை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டு!

Tamil News large 2111398
Tamil News large 2111398

வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்ட பூங்காவில் அனுமதியளிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்த போதிலும் நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என குளத்தினை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் நகரசபையின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவானது அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டதற்கு மேலதிகமாக தற்போது மறைப்பு ஏற்படுத்தப்பட்டு புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டு உடனடியாக வேலைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தரும் எமது உத்தியோகத்தர்கள் சகிதம் வருகை தந்து உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டன. எனினும் எம்மால் களத்திற்கு சென்றபோது பெருமளவான வேலைகள் முடிவுற்றதுடன் தொடர்ந்தும் வேலைகள் நடைபெறுவதும் அவதானிக்கப்பட்டது.

மேலும் அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் எந்த மேலதிக கட்டுமானங்களுக்கும் வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்ட பூங்காவினுள் நிர்மாணிப்பதற்கு அனுமதிப்பதில்லை என அனைத்து பங்குதாரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் எம்மால் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு வெளிப்புறமாக குளத்தினை கிரவல் இட்டு நிரப்பி கட்டடங்கள் அமைப்பது ஏற்கனவே எடுத்த கூட்ட தீர்மானங்களுக்கு முரணானது.

எனவே எம்மால் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு வெளிப்புறமாக கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் மற்றும் நிரப்பப்பட்ட மண்ணையும் உடனடியாக அகற்றுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன் என நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளரினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடிதத்திற்கு ஏற்ற வகையில் எவ்வித நடவடிக்கைகளையும் நகரசபை செயற்படுத்தவில்லை என குளத்தை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த கட்டுமான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.