முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் – ஜீவன்

Jeevan Thondaman 011
Jeevan Thondaman 011

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் 15 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) மாலை ஹற்றன்- டிக்கோயா வனராஜா பகுதியில் பிரஜாசக்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ருந்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் தற்போது நிறைவேற்றி வருகின்றோம்.

நாம் பதவிக்கு வந்து ஒரு வருடம்கூட நிறைவடையவில்லை. இருப்பினும் பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபாய் போன்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அடுத்ததாக வேலையிண்மை பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரிருவருக்கு வேலை வழங்குவது என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அல்ல. தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

இதேவேளை ஆயிரம் ரூபாய் தொடர்பாக பேசுகின்றனர். ஆயிரம் மாத்திரம் எமது இலக்கு அல்ல. எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏனைய நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே பாடுபடுகின்றோம்.

கூட்டு ஒப்பந்தம் சரியில்லை என்றனர். தற்போது ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்கின்றனர்.

ஊடகங்கள் முன்னால் உரையாடியே சிலர் அரசியல், தொழிற்சங்கம் நடத்துகின்றனர். இவர்களின் இரட்டை வேடம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.