ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கு ரணிலின் அரசியல் புரட்சியே காரணம்! – சஜித் அணி சாடல்

2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6 XL
2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6 XL

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையேற்று ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் அரசியல் புரட்சி செய்தார். அதன் விளைவால்தான் அக்கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஓர் ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க, அரசியலில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவார் என விடுக்கப்படும் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் விக்கிரமசிங்கவால் இன்னும் ஒரு தடவைகூட ஜனாதிபதியாக முடியவில்லை. பலமான எதிரணியையும் அவர் கட்டியெழுப்பவில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியே இனி நிறைவேற்றும்.

ரணில் 27 வருடங்கள் புரட்சி செய்தார்தான். ஆனால், கட்சி பூஜ்ஜிய நிலைக்கு இன்று வந்துள்ளது. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால்தான் நாம் ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படுகின்றோம்.

ரணில் மீது மதிப்பு உள்ளது. ஆனால், அரசியல் ரீதியில் கொள்கை ரீதியில் முரண்பாடு உள்ளது” – என்றார்.

அதேவேளை, அரசுடன் ‘டீல்’ வைத்துக்கொள்ளாமல் எதிரணியாக சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் பயணிக்க ரணில் விக்கிரமசிங்க முன்வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.