தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்

DSC 2533
DSC 2533

நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகள் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள கைதிகள் இன்னும் வழக்குத் தாக்கல் செய்யாத கைதிகள் என அனைவரையும் மிக விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (28) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கடந்த 24 ஆம் திகதி பொசன் தினத்தை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய அரசியல் கைதிகள் 16 பேரை விடுதலை செய்துள்ளார்.

குறித்த 16 நபர்களும் ஏற்கனவே நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு இன்னும் குறுகிய காலத்தில் தங்களுடைய தண்டனை காலத்தை நிறைவு செய்து வெளியில் வர இருந்தார்கள்.

குறிப்பாக அதில் இரண்டு பேர் மாத்திரமே 4 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். ஏனைய 14 பேரும் ஒரு வருடத்திற்குள் சிறையிலிருந்து வெளிவர இருந்த வேளையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இன்னமும் நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகள் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள கைதிகள் இன்னும் வழக்குத் தாக்கல் செய்யாத கைதிகள் என்று அனைவரையும் மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றேன்.

மேலும் குறித்த அரசியல் கைதிகளோடு சேர்த்து தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் ஒருவரையும் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்துள்ளார்.

இந்த விடுதலைக்கு ஐ.நா , அமெரிக்க செயலகங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.சட்டத்தரணிகள் கூட குறித்த அரசியல் பிரமுகரின் விடுதலைக்கு ஜனாதிபதியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதி ஏற்கனவே தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிருசுவில் பகுதியில் பொது மக்களை படுகொலை செய்தவரை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் அதிகாரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

எனவே ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் சிறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிற்பாடு 2012 ஆம் ,2013 ஆம் ,2014 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 58 பேர் சிறையில் இருக்கின்றார்கள்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதேவேளை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுகள் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்க விடயம் என்பதை நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

அந்த வகையில் தற்போது தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் எவ்வளவு பாதகமானது என்பதை தென்பகுதி சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.