அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை – செல்வம்

Selvam Adaikalanathan 1
Selvam Adaikalanathan 1

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த  விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் சமூகமளிப்பதில்லை இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கவனமெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்


மின்சார கட்டண விடயத்தில்  பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நியாயமாக நடந்துள்ளதுடன் அவரது கடைமையை சரியாக செய்துள்ளார். அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததுடன்,  அது தொடர்பாக சரியான வழிமுறைகளை கையாளாத சூழ்நிலையில் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அந்த வகையில் அவரின் எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். 


எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவது தொடர்பான மசோதா வருகின்ற போது  தமிழ் தேசிய கூட்டமைப்பும். ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவெடுப்போம்.
விலைவாசி அதிகரிப்பின் போது அவர் மக்கள் சார்பாக நின்றவர். எனவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆதரவழிக்கும் சூழல் உருவாகும். எனவே நாம் கூடி இறுதி முடிவெடுத்து அவருக்கு ஆதரவாக செயற்படுவதே சாலச்சிறந்தது. 


அத்துடன் வவுனியா பிரதேச அபிவிருத்திக்கூட்டங்களில் நாம் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில்  பிரதேசஅபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் நேரங்களில் கொழும்பில் முக்கிய சந்திப்புக்கள், இடம்பெறும் போது அதில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுகின்றது.
எம்மிடம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் வினோநோகராதலிங்கம் பெரும்பாலான கூட்டங்களில் தனது பங்களிப்பை செய்துள்ளார். அத்துடன் முழுமையாக நாங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை தவிர்ப்பதில்லை. இனிவரும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்.  


அத்துடன் அபிவிருத்தி குழு என்ற போர்வையில் ஒரு விடயம் முடிவாக எடுக்கப்படாமல், காலம் தாழ்த்தப்படுகின்றது.முதலில் தீர்மானமாக எடுப்போம், பின்னர் ஜனாதிபதிக்கு கொடுப்போம் என்றவாறே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது. 


மாறாக மக்கள்நலன் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அத்துடன்  இக்கூட்டங்களிற்கு திணைக்கள அதிகாரிகள் கூட கலந்து கொள்வதில்லை. 


எனவே கூட்டங்களின் போது முடிவெடிக்க வேண்டிய விடயங்களிற்கு அன்றையதினமே முடிவெடுத்தாக வேண்டும். அதற்காக நாங்கள் நிச்சயமாக குரல்கொடுப்போம். வெறும் கூட்டமாக இல்லாமல், அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்திக்குழு தலைவர் ஏற்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் வராவிடில் அவ்விடயம் முடிவு எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே அபிவிருத்திக்குழு தலைவர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.