சிவாஜிலிங்கத்தை எச்சரித்து பிணை வழங்கிய நீதிமன்றம்!

6BCA8C7C 0300 47A7 9FEB 8DF32CC89497
6BCA8C7C 0300 47A7 9FEB 8DF32CC89497

நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று(16) பிற்பகல் 1.45 மணியளவில் பிணை வழங்கியுள்ளது.

அத்துடன், அவருடன் கைது செய்யபட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தையும் அவருக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதியையும் கைது செய்தனர்.இருவரையும் தடுத்துவைத்திருந்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரான லெப்டின் கேணல் திலீபனை நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இருவருக்கும் எதிராக மன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் தீர்ப்பளித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்,உங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு கிடைக்கவில்லை என்று மன்றுரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்தவர். அவ்வாறு இருக்கையில் இந்த விவரத்தை அறிந்திருக்காமல் இருக்க முடியாது.சட்டத்தின் படியே நீதிமன்றக் கட்டளைகள் இயற்றப்படுகின்றன. அது எல்லோருக்கும் சமம். இனி இவ்வாறு நடக்ககூடாது” என்று கட்டளை வழங்கினார்.

சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணிகள் என்.சிறீகாந்தா, வி.திருக்குமரன் உள்ளிட்ட 8 சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகிமை குறிப்பிடத்தக்கது.