மாணவர்களை உள்வாங்கும் முறைமையில் மாற்றம்

00 mk
00 mk

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் இஸட் ஸ்கோர் வெட்டுப்புள்ளி முறைமையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இம்முறை அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதுவரையில் மாவட்ட ரீதியிலேயே இஸட் ஸ்கோர் வெளியிடப்படுகின்றது. இதற்குப் பதிலாக பாடசாலை கட்டமைப்பின் மூலம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் முறைமை 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் கூடிய புள்ளிகளின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

மாவட்ட வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யும் முறைமை மூலம் கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது.

கொழும்பு நகரில் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரும் கொழும்பு மாவட்டத்தில் மிகவும் வறுமையான பிரதேச பாடசாலையொன்றில் கல்விக் கற்கும் மாணவரும் ஒரே வெட்டுப்புள்ளியை பெற்றால்தான் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாக முடியும்.

இந்த முறைமை மிகவும் அநீதியானது. எமது கல்விக் கொள்கையில் மாணவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும். ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனையே அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் முகமாக மாவட்ட முறைமைக்கு பதிலாக பாடசாலை அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள்.

தற்போது 55 சதவீதம் மாவட்ட அடிப்படையிலும், 40 சதவீதம் திறமையின் அடிப்படையிலும், 5 சதவீதம் வறுமையின் அடிப்படையிலும் பல்லைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படுகின்றது.

வெட்டுப்புள்ளி அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் 55 சதவீதமே பாடசாலை முறைமைக்கு மாற்றியமைக்கப்படுகிறது.

துறைசார் நிபுணர்களால் இந்த முறைமை குறித்து ஆய்வுக்கு உட்படுத்தி நடைமுறைப்படுத்த குறைந்தது ஆறு, ஏழு மாதங்கள் தேவைப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.