வறுமையிலுள்ள ஒரு லட்சம் பேருக்கு அரச துறையில் தொழில்

3 dsd
3 dsd

மிகவும் வறுமையானவர்கள் மற்றும் வறுமை நிலையிலுள்ள கல்வி அறிவு குறைந்தவர்கள் ஆகியோரைக் கொண்டு அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் என்பவற்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு இலட்சம் பேரை நியமித்து அவர்களுக்கு ஆறுமாத காலம் பயிற்சியளித்து அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் இச்செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பல்நோக்கு மேம்பாட்டு செயலணியொன்றை அமைத்து அரசாங்க திணைக்களம் என்ற ரீதியில் அதன்மூலம் இணைத்துக்கொள்ள அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் குறைந்த வருமானத்தை கொண்ட  குழுவினர் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் மற்றும் ஏனைய அனுசரணைகளின் அடிப்படையில் இவ்வாறான தொழில் வாய்ப்புகளுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை ஜனாதிபதியால் அவதானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் அரசியல் மற்றும் வேறு சக்திகளின் தலையீடுகளின்றி சுயாதீனமாக இணைத்துக்கொள்ளப்படுவர். வெளிப்படைத்தன்மையுடன் மாவட்ட மட்டத்தில் இவர்களை தெரிவுசெய்வதற்காக பல்துறை மேம்பாட்டு செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.