வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணை: சகிலாபானு!

Vavuniya
Vavuniya

வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2010ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு ஆடி மாதம் வரையிலான காலப்பகுதியில் வவுனியா அரசினர் விதை உற்பத்தி பண்ணைக்கு வருடாந்த முற்பணக்கணக்குகள் மூலம் செலவு செய்யப்பட்ட பணத்தின் பெறுமதி, பண்ணை மூலம் பெறப்பட்ட பணம், வருடாந்தம் பெறப்பட்ட வருமானத்தின் முற்பணக்கணக்கின் மூலம் வைப்பிடப்பட்ட பணம் வருடாந்த லாபம் அல்லது நஸ்டம் ,
2010ம் ஆண்டிலிருந்து 2019 ஆடி மாதம் வரை அரசினர் விதை உற்பத்தி பண்ணையில் நெற் செய்கை பண்ணப்பட்ட விஸ்தீரணம், இன ரீதியாக அறுவடை செய்யப்பட்ட விஸ்தீரணம், பெறப்பட்ட ஈரநிறை,பெறப்பட்ட விதை நெல் அளவு, சராசரி விளைச்சல் பயிரழிவு விஸ்தீரணம், 6 மாத காலப்பகுதி காலத்தில் அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற உற்பத்தி தொடர்பான நடவடிக்கையும் அதில் ஈட்டிய வருமானம் தொடர்பாகவும், இவ்வருட ஆரம்பத்திலிருந்து 6மாத காலப்பகுதிக்குள் அரச விதை உற்பத்திப்பண்ணைக்கு உற்பத்தி பொருட்டு கொள்வனவு செய்யப்பட்ட ரூபா.500க்கு மேற்பட்ட கொள்வனவு சிட்டைகள் தொடர்பாக கடந்த 29.07.2019 தொடக்கம் ஆரம்ப கட்ட புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்றுகின்றன.

எனவே 2016ம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டம் சரம் 4 ற்கு அமைவாக புலனாய்வு விசாரணைகள் முடிவுறும் வரையில் கோரப்பட்ட தகவலுக்கான பதிலை வழங்க முடியாது என வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு மேலும் தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு தெரிவித்திருந்த போதிலும் தகவல் அறிவும் உரிமைச்சட்டம் பிரிவு 04 இல் “இச்சட்டமானது வேறு சட்டங்களுடன் முரண்படுமாயின் இச்சட்டமானது மேலோங்கி நிற்கும்” என்பதையே குறிப்பிடுகின்றது. எனவே வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் தகவலை வழங்க மறுக்க முடியாது.

குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவிற்கு தவறாக வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் தகவல் வழங்கியுள்ளமையினால் அவர் மீது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேல்முறையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.