எதிர்வரும் 14 யாழில் போராட்டம்: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

vlcsnap 2019 09 11 11h19m28s019
vlcsnap 2019 09 11 11h19m28s019

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை யாழில் நடாத்த உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் நடைபெறுவது போன்று தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ் சங்கிலியன் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு அரசின் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 14 யாழில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழிலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏனெனில் இந்தப் போராட்டத்தை அரசாங்கமோ எங்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்வதில்லை. அதனால் அவர்கள் தேர்தல்களில் வீழ்ச்சிகளையே எதிர்நோக்கி வருகின்றனர்.
ஏங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இப்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் திருவிழாக்களில் உள்ளனர். அவர்கள் எமது பிரச்சனையில் அக்கறை கொள்வதில்லை. தங்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் எமக்காக போராடி வருகின்றோம். அதனடிப்படையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம். அரசியல் வாதிகள் எமது போராட்டத்தைக் கண்டுகொள்ளாது விட்டாலும் பொது மக்கள் எமக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர். அரசியல்வாதிகளின் சுய நல செயற்பாடுகளை இன்றைக்கு சகலரும் அறிந்து கொண்டுள்ளனர்.

மேலும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகமொன்று யாழில் தற்பொது திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் எங்கள் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆகவே அந்த அலுவலகம் இங்கு தேவையில்லை. அதை தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தே தொடர்ச்சியான போராட்டதை முன்னெடுக்க உள்ளதாக கூறினர்.