தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்ததன் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல, எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வு தமிழர்களான எம்மத்தியில் எழுகின்றது. ஒரு தேசத்தில், ஒரு தேசிய கொடியில் தமிழர்களை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள பேரினவாத தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் .
தமிழ் மக்கள் இந்த நாட்டில் புறக்கணிகப்பட்ட மக்கள் என்பதை சிங்கள தரப்பினர் பல்வேறு செயற்பாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
யுத்தத்திற்கு முன்னரும் சரி யுத்த காலகட்டத்திலும் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்தும் சரி சிங்கள தரப்புகள் தமது மனங்களில் இதனை கனமாக வைத்துக் கொண்டு பயணிக்கின்றனர்.
இந்தநாடு தமிழர்களுக்கு அல்ல என சிங்கள பேரினவாத சக்திகளே கூறிக்கொண்டுள்ளன. அதன் ஒரு வெளிப்பாடே இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களின் உரிமையை பறிக்கும் விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி தேசியகீத புறக்கணிப்பாகும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கின்றது என்பது தமிழர்கள் இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது.
ஒரு தேசம், ஒரு தேசியக்ெகாடி என்ற ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்த சிங்கள தலைமைகள் தயாராக இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறி வருகின்றனர்.
இந்த நாட்டினை புறக்கணிக்க தமிழர்கள் எந்த செயற்பாடுகளையும் செய்யவில்லை, ஆரம்பம் முதற்கொண்டு சிங்கள தலைவர்களே இந்த நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற வகையில் சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமளிக்கக் கூடிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்