‘எழுக தமிழ்’ ற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்:தமிழ் மக்கள் பேரவை!

eluka thamil
eluka thamil

பல்வேறு வகையிலான புறச்சூழல்கள் சாதகமற்ற தன்மையினை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் தேசமாக நாம் ஒன்றிணைந்து தமிழர்களது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற உணர்வுடன் வடக்கு கிழக்கு தழுவியதாக வருகைதந்தும், அன்றைய தினத்தில் வழமைமறுப்பினூடாக தமது அன்றாட செயற்பாடுகளை முடக்கி தார்மீக ஒத்துழைப்பினை நல்கியும் ஆதரவளித்து பலம்சேர்த்த அனைத்து தரப்பினருக்கும் இந்நேரத்தில் சிரம்தாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் கூறுகையில்…

அன்பான தமிழ் மக்களே!

முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் ஏற்படுத்திச் சென்ற மனக்காயங்களின் பாதிப்புகள் ஒருப்பகம் எம்மை அழுத்திக் கொண்டிருந்த போதிலும், அதனையும் கடந்து நீதிக்கான முன்னெடுப்புகளை மக்கள் தாமாகவே மேற்கொள்ளும் புறச்சூழலை எழுக தமிழ்-2016 ஏற்படுத்தியிருந்தது.

2009 இன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலானது தேர்தல் சகதிக்குள் மூழ்கியுள்ள பின்னணியில் நம்பிக்கையிழந்த நிலையில் தான் எம் மக்கள், தமது பூர்வீக நிலங்களை மீட்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கவும், சட்டவிரோதமான முறையில் சிறையிலடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்கவுமாக இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு நீதிகேட்டு தாமாகவே முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வகையிலான போராட்டங்களில் அப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தம்மை வருத்தி ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களது கோரிக்கைகளை தமிழ்த் தேசத்தின் குரலாக உலகத்தார் முன் எடுத்தியம்பும் வகையில் தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ்-2019 நிகழ்வை காலத்தின் தேவையறிந்து ஏற்பாடு செய்து மக்கள் பங்கேற்புடன் நடாத்தியுள்ளது.

பல்வேறு வகையிலான புறச்சூழல்கள் சாதகமற்றதன்மையினை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் தேசமாக நாம் ஒன்றிணைந்து தமிழர்களது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற உணர்வுடன் வடக்கு கிழக்கு தழுவியதாக வருகைதந்தும், அன்றைய தினத்தில், வழமைமறுப்பினூடாக தமது அன்றாட செயற்பாடுகளை முடக்கி தார்மீக ஒத்துழைப்பினை நல்கியும் ஆதரவளித்து பலம்சேர்த்த அனைத்து தரப்பினருக்கும் இந்நேரத்தில் சிரம்தாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ்-2019 தொடர்பான முன்னெடுப்புகளை வெகுஜன பரப்பிற்கு கொண்டுசேர்க்கும் பணியை செவ்வனே செய்த தாயக ஊடகவியலாளர்களுக்கும் அதற்கான களத்தினை அமைத்துக் கொடுத்த ஊடக நிறுவனத்தாருக்கும், கடல்கடந்து செயற்பட்டுவரும் தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் இணைய ஊடகங்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழுணர்வுடன் எழுக தமிழ்-2019 இல் பங்கேற்ற மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஒத்துழைத்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இது தவிர பணிச்சூழல் காரணமாக நேரடியாக பங்கேற்கவோ, ஒத்துழைக்கவோ முடியாத நிலையிலும் உள்ளார்ந்தமாக எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் நல்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிலம்-புலம்-தமிழகம் இணைந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைக்குரலை உலகறியச் செய்யும் வகையில் கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஜெனீவா மற்றும் தமிழ்நாடு ஆகிய நாடுகளிலும் எழுக தமிழ்-2019 ஆதரவுப் பேரணிகளை முன்னெடுத்திருந்த தரப்பினருக்கும், அறிக்கைகள் மூலமாக ஆதரவினை வெளிப்படுத்திய புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தாயகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் தேசமாக அணிதிரள வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு தமது பூரண ஆதரவினை வழங்கிய சமூக மட்ட அமைப்புகள், தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளுக்கும் தன்னார்வ செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழ் மக்களின் உரிமை சார்ந்தும், நீதிக்காகவும் நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து பலம்சேர்க்க வேண்டுமெனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.