இன்று காலை இலங்கையில் பல பகுதிகளில் நிலநடுக்கம்

1 earthquake
1 earthquake

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கொழும்பிலும் சுமார் 3 செக்கன்களுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, குடுகலஹேன மற்றும் தெய்யன்தர பிரதேசத்திலும் அம்பலன்கொட பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 2.33 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சில நொடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக காலி மாவட்டத்தின் மெதகீம்பிய பிரதேசத்திலும் இவ்வாறான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எனினும் எவ்வித சேதங்களும் ஆபத்துக்களும் பதிவாகாமையினால் பொது மக்களை அச்சமடைய வேண்டாம். இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.