வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்பது தவறானது – க.வி .விக்னேஸ்வரன்

6 es 1
6 es 1

வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான க.வி .விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஷ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இதற்குக் காரணம் உண்டு. பலர் கிழக்கைப் பற்றிப்பேசி அங்கு சிங்கள, முஸ்லிம் பெரும்பான்மையினர் மத்தியில் எவ்வாறு வடகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார்கள். அதனால் வட கிழக்கு இணைப்பை விட்டுவிடக் கோருகின்றார்கள்.

முஸ்லிம் மக்கள் தமிழ் பேசுகின்றவர்கள். வட, கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் கிழக்கிலும் தமிழ்மொழி பேசுவோரே பெரும்பான்மையினர். ஆகவே தமிழ் பேசும் பிராந்தியங்களை இணைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு இஸ்லாமிய அலகொன்றை வட கிழக்கினுள் உறுதி செய்வதில் தவறு ஏதும் இருக்க முடியாது.

1987ம் ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் வட கிழக்கு இணைப்பு இடம்பெற்றது. 18 வருட காலமாக வடக்கும் கிழக்கும் இணைந்தே செயற்பட்டன. ஆகவே வட கிழக்கு இணைப்பு நடைமுறைச் சாத்தியமாகாது என்று கூறுவது தவறு.

வடக்கும் கிழக்கும் இணையாவிட்டால் பெரும்பான்மை அரசாங்கங்கள் வடக்கையும் கிழக்கையும் பிரித்து சிங்களக் குடியேற்றங்களை அங்கு உறுதி செய்து விடுவார்கள்.

பின்னர் தமிழ்பேசும் மக்களை வட கிழக்கில் சிறுபான்மையினர் ஆக்கி சுமார் கால் நூற்றாண்டு காலத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் குடியிருப்புக்களைக் கபளீகரம் செய்து விடுவார்கள். தற்பொழுதும் எம் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவே குறிக்கோளாக இருக்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சகோதரர்கள் மொழிக்காகப் போராடுவார்களா அல்லது தமது மதத்திற்காகப் போராடுவார்களா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

ஆகவே வட கிழக்கு இணைப்பானது தமிழ்மொழி பேசும் அனைவரும் தமது இருப்புக்களை உறுதிசெய்ய அத்தியாசியமாகிவிடுகிறது. எம்மை நாமே ஆளவேண்டிய ஒரு கடப்பாடும் எமக்குண்டு. எம்மை நாம் ஆள நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது வளங்கள் யாவும் வெளிமாகாண மக்களின் கைவசம் அகப்பட்டுக்கொண்டு விடுவன” என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.