பொதுத் தேர்தலைப் பிற்போட்டுவிட்டு இராணுவ ஆட்சியை நடத்த திட்டம்

8ad
8ad

“நாடாளுமன்றத் தேர்தலைக் காலம் கடத்திவிட்டு இராணுவ ரீதியான  ஆட்சி முறைமையை முன்னெடுத்துவிட்டு அதன்பின்னரே தேர்தலை நடத்துவதற்கான முயற்சியில் ராஜபக்ச அரசு ஈடுபட்டுள்ளது.”

– இவ்வாறு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைத் தலைமையக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அதிகரித்திருக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் நாட்டு மக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அதிருப்தியைக் கருத்தில் கொண்டும் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பலம் பொருந்திய எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சியும் பொதுத் தேர்தலைப் பிற்போடுவதற்கான ராஜபக்ச அரசின் நடவடிக்கைகள் இடம்பெறுவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தலைக் காலம்  கடத்திவிட்டு இராணுவ ரீதியான  ஆட்சி முறைமையை முன்னெடுத்துவிட்டு அதன்பின்னரே தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுதவதாக  அரச உயர்மட்டத் தகவல்களின் ஊடாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அரசின் இந்தச் சதித் திட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதி வழங்காது. தேர்தலைக் குறித்த தினத்தில் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்” – என்றார்.