தமிழ் மக்களுக்கு என்ன தருவேன் என்பதை சஜித் வெளிப்படையாகக் கூறவேண்டும் – விக்கி

vikkimullai
vikkimullai

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற கேள்விக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பதில் அளித்துள்ளார். அவரது பதில் வருமாறு,

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில் தான் பின்னர் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடப்பன. ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு. அதற்குக் காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுகாறும் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு அளத்து வந்தமையே. எப்படியுந் தமக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் சஜித் இருந்தால் அவர் தன்னைத் தானே ஏமாற்றுபவர் ஆகிவிடுவார்.

கோதாபயவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார். தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் கோதாபயவே வெல்வார். கோதாபயவுக்கு எந்தத் தன்மானத் தமிழனும் வாக்களிக்க மாட்டார்; என்று நான் முன்னர் கூறியுள்ளேன். சஜீத் எந்தவித நன்மையைப் பெற்றுத் தருவேன் என்று தமிழர்களுக்கு கூறாது விட்டு தமிழர்கள் எவருக்கும் வாக்களியாது விட்டால் அது கோதாபயவுக்கே நன்மையாகப் போய்விடும். கோதாபய தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன செய்யப் போகின்றார் என்று எதுவுந் கூறத்தேவையில்லை. ஆனால் சஜீத் எமக்கு என்ன தரப் போகின்றார் என்று கூறாதுவிட்டு தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோதாபய வெல்வார்.

கோதாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை. தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மைதரும்.

அமெரிக்காவுடன் “கள்ள உறவு” கோதாபயவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலுந் கூட அமெரிக்கா கோதாபயவை வழி நடத்தவே பார்க்கும். அது தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கும். ஏனென்றால் எமது புலம் பெயர் தமிழரின் செல்வாக்கு அமெரிக்காவில் இருப்பது கண்கூடு.

ஆகவே சஜீத் எமக்குத் தரப் போவதை அவர் தெளிவாக வெளிப்படையாகக் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரப்போகும் சிங்கள வாக்குகள் குறைந்து விடமாட்டா. ஆனால் தமிழ், முஸ்லிம் வாக்குகள் அவரை வெல்ல வைக்கும். தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களை ஏற்கனவே பல ஆவணங்களில் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே பாரம்பரிய தமிழ்ப் பேசும் பிரதேசங்கள் எவை என்பதை சஜீத் ஏற்க வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு வழங்கப்போகுந் தீர்வை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும். வேண்டுமெனில் புத்தரின் போதனைகளே தம்மை வழிநடத்துவதாகக் கூறி எமக்கு அவர் தரப்போவனவற்றைக் கூறி வைக்கலாம். எம்மைப் பொறுத்த வரையில் அவர் தருவதை ஏற்கும் நிலையில் நாம் இல்லை. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரித்துக்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு திருப்பித்தர வேண்டும் என்பது சம்பந்தமாகவும் எமது முன்மொழிவுகளை இந்த அரசாங்கத்திற்கு ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. எமது மாகாண சபையும் அது பற்றித் தனது முன்மொழிவுகளைத் தெரியப்படுத்தியுள்ளது.

ஆகவே சஜீத் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பரிசீலித்துப் பார்ப்போம். அதன்பின் அவரின் நிலைப்பாட்டைக் கேட்டறிவோம்.

பின்னர் நடவடிக்கையில் இறங்குவோம். இப்போது பொறுமை காப்போம்.