வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

1 ad
1 ad

ஓராண்டு திருமண நிறைவை அடுத்த மாதம் கொண்டாடவிருந்த 30 வயது ரவிச்சந்திரன் ராமகிருஷ்ணன், புது வாழ்க்கையைத் தொடங்க சொந்த கிராமமான பாறையூரில் புது வீடு கட்டிக்கொண்டிருந்தார்.

கடன்களை அடைத்துவிட்டு, புதுமனையில் மனைவியுடன் வாழ்க்கையைத் தொடங்கவிருந்த அவரது திட்டங்கள் சென்றவாரம் நடந்த விபத்தில் சிதைந்துபோயின.

கடந்த வியாழக்கிழமை பாலஸ்டியர் சாலையில் இருக்கும் ஷா பிளாசாவில் ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்தார். ராமகிருஷ்ணனின் நல்லுடல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.

சனிக்கிழமை காலை அவரது சொந்த ஊரில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

‘எக்ஸ்பிரஸ் 21’ நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த அவர் எண் 360, பாலஸ்டியர் சாலையில் உள்ள கட்டடத்தின் முதல் தளத்தைப் பிரிக்கும் பலகை வழியாக கீழ்த்தளம் ஒன்றின்மீது விழுந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. வேலூர் மாவட்டம்,

திருபத்தூரைச் (வாணியம்பாடி) சேர்ந்த ரவிச்சந்திரன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பல கட்டுமானத் துறை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2018ல் சொந்த ஊருக்குச் சென்ற அவர், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அங்கேயே தங்கி வீடு கட்டுவதுடன் கல்யாண காரியங்களில் மும்முரமாக இருந்தார். கடன்களை அடைக்க மூன்று மாதங்களுக்கு முன்னர் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

“திருமணம் முடித்து அவரின் வாழ்க்கை இப்போது தான் தொடங்கியுள்ளது. குழந்தைகள் கூட இல்லை. அவரின் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார் இறந்தவரின் உறவினரான திரு முருகேசன்.

“எல்லாருடனும் நட்பாக இருப்பார். சிரித்துப் பழகுவார். அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளோம். கடந்த சில நாட்களாக யாரும் சரியாகச் சாப்பிடவில்லை,” என்றார் திரு பார்த்திபன்.

ரவிச்சந்திரன் குடும்பத்தில் 55 வயது தாயார் ராஜியம்மாள், 26 வயது மனைவி வளர்மதி, 32 வயது அண்ணன் பார்த்திபன், 34 வயது அக்கா தனலட்சுமி ஆகியோர் உள்ளனர். பணிக்கால காய இழப்பீட்டுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்

ரவிச்சந்திரன் பணிபுரிந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்யப்போவதாகவும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தெரிவித்துள்ளது.

‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ அமைப்பின் 300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் உதவியால் அந்தக் குடும்பத்துடன் தொடர்புகொள்ள முடிந்தது.

“மரணமடைந்த ஒவ்வொரு ஊழியரும் முக்கியம். அவர்கள் ஓர் எண்ணிக்கையோ பொருளோ அல்ல. மரணமடைந்த ஊழியருக்கு உதவ எண்ணுபவர்கள் எங்களை ஃபேஸ்புக் மூலமாகவோ நேரடியாக ரவிச்சந்திரனின் குடும்பத்தையோ தொடர்புகொள்ளலாம்,” என்றார் ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ நிறுவனர் குமாரி தீபா சுவாமிநாதன்.

இம்மாதம் 4ஆம் தேதி ஜாலான் டான் டோக் செங்கிலுள்ள கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி விழுந்ததில் 28 வயது கட்டுமானத் துறை ஊழியர் முத்தையா வேல்முருகன் மரணமடைந்தார். அதையடுத்து இச்சம்பவம் நிகழ்கிறது.