அமெரிக்க இராணுவம் நடாத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஈரான்!

1
1

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரிலுள்ள குறிப்பிட்ட பிரதேசத்தின் மீது ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு என தங்கியுள்ள அமெரிக்க இராணுவம் நடாத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை ஈரான் வன்மையாக கண்டித்துள்ளது.இதேவேளை, அமெரிக்கா நடாத்தியுள்ள விமான தாக்குதல்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும் ஈராக் எச்சரித்துள்ளது. 

இது அமெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறியுள்ளார்.அமெரிக்காவின் இந்த விமானத் தாக்குதலைக் கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக் காரர்கள் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர்.‘அமெரிக்காவுக்கு மரணம்’ ‘அமெரிக்க தூதரகம் மூடப்படவேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேற நாடாளுமன்றம் உடனடியாக உத்தரவிடவேண்டும் எனவும் கோசமிட்டுள்ளனர்.போராட்டக்காரர்களில் சிலர் அமெரிக்காவின் கொடியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் நிலைகள் எனத் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இதில் 30 இற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரில் உள்ள பிரதேசங்கள் மீதும் அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.இந்தத் தாக்குதல்கள் காரணமாக ஆத்திரமடைந்த ஈராக் மக்களே அமெரிக்க தூதரகத்தின் முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.