கியூபா மருத்துவர்கள் – பரிகாசம் செய்தவர்களுக்கும் பணிவிடை

31 1
31 1

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து நிற்கும் இத்தாலிக்கு, கியூபாவில் இருந்து 52 மருத்துவ குழுவினர் சென்று அங்கு உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிவரும் சூழலில் பல நாடுகளிலும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அப்படி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இத்தாலி.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் சிக்கி இத்தாலியில் இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த சூழலில் யாருமே செல்ல அஞ்சும் ஒரு இடத்திற்கு மிக துணிச்சலாக கியூபா மருத்துவ குழு சென்றிருக்கிறது என்றால் அது ஃபிடல் காஸ்ட்ரோ உருவாக்கிய மருத்துவ புரட்சிப்படையே காரணமாகும்.

கியூபாவில் உள்ள கட்டாய இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி ஆகிய இரண்டு நடைமுறைகளும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புகழையும், தத்துவத்தையும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகிற்கு பறைசாற்றும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

கியூபாவில் மருத்துவர்கள் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைதிப்படை என்ற பிரிவின் கீழ் மருத்துவர்கள் கியூபாவிலேயே தங்கி சொந்த நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் . மருத்துவ புரட்சிப்படை என்ற பிரிவின் கீழ் வரும் மருத்துவர்கள் மற்ற நாடுகளில் நிகழும் இயற்கை பேரிடரின் போது தன்னார்வமாக சென்று செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸின் தாக்கம் உச்சகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் கியூபா மருத்துவ புரட்சிப்படையில் இருந்து இதுவரை வெனிசுலா, நிகாரகுவா, ஜமைக்கா, சுரிநேம், கிரிகடா, இத்தாலி ஆகிய 6 நாடுகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று சேவையாற்றி வருகின்றனர்.

இன்று உலகில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என எத்தனையோ இருந்தும் ஒரு ஏழ்மை நாடான கியூபா மருத்துவ தொண்டில் தன்னிகரற்ற சேவையில் தலைசிறந்து திகழ்கிறது.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் கியூபா மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று.

ஆனால் எந்த வஞ்சத்தையும் மனதில் கொள்ளாமல் இன்று இத்தாலிக்கு ஓடோடி சென்று உதவிக்கரங்கள் நீட்டியுள்ளனர் கியூபா மருத்துவ புரட்சிப்படையினர்.

உலகில் எங்கெல்லாம் மருத்துவர்கள் இல்லையோ அங்கெல்லாம் கியூபா மருத்துவர்கள் சென்று தொண்டாற்ற வேண்டும் என்பது மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மிகப்பெரும் கனவு.

மருத்துவத்துறையில் கியூபா முன்னெடுத்த புரட்சியை இதுவரை உலக அரங்கில் வேறு எந்த நாடுகளும் செய்திருக்கிறதா என்றால் அது சந்தேகமே.

சரி கியூபாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையா என பலருக்கும் கேள்வி எழக்கூடும். கியூபாவிலும் வைரஸ் தாக்கல் இருக்கிறது, ஆனால் மற்ற நாடுகளை போல் ஆயிரங்களிலோ, நூற்றுக்கணக்கிலோ இல்லை.

அல்ஜஸீரா செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள தரவுப்படி இதுவரை கியூபாவில் 48 பேர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாகவும் தகவல் உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கியூபாவில் இதுவரை ஒரே ஒரு உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனுக்கு சொந்தமான சொகுசு கப்பலில் கொரோனா தொற்றுள்ள பயணிகள் இருந்ததால் கரீபியன் கடல்பகுதியில் இருந்து தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த பல நாடுகளும் அனுமதி மறுத்த நிலையில், தாயுள்ளதோடு கியூபா அந்த கப்பலுக்கு அனுமதி அளித்து அதில் கொரோனா தொற்றிருந்த நபர்களுக்கும் சிகிச்சை வழங்கியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் கியூபாவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றன.