நாடாளுமன்ற ஆசனம் : சித்தார்த்தனுக்குத் தூதுவிடும் ஐங்கரநேசன்!

111
111

‘ஆசை வெட்கமறியாது’ என்பார்கள். இந்தவிடயம் எதற்குப் பொருந்துதோ இல்லையோ இன்றைய தமிழ் அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாக மாறிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க ,நெருங்க தமிழ் அரசியல் சூழலில் அணி மாறுதல்களும் கழுத்தறுப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த அணியிலிருந்து விலகிய நிலையில் தனித்துப் போட்டியிடும் ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தார்.

தற்போது திடீர்த் திருப்பமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தனைத் தொடர்புகொண்ட தமிழ்த் தேசியப் பசுமை இயகத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் அந்தக் கட்சிக்கு யாழ்ப்பாணம் .மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றைத் தனக்குத் தரும்படி கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு உடனடியாக எந்தச் சாதகமான பதிலையும் வழங்காத சித்தார்த்தன் தான் கொழும்பில் இருப்பதால் யாழ்ப்பாணம் வரும்போது நேரில் சந்தித்துப் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

ஐங்கரநேசன் ஊழல்வாதி அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி வடமாகாண சபையில் அப்போதைய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அணியினர் அழுத்தம்கொடுத்து மாகாண சபையை இயங்கவிடாமல் முடக்கியிருந்தனர்.

இந்த நிலையில் சித்தார்த்தன், ஐங்கரநேசனுக்கு ஆசனம் ஒன்றை வழங்க சம்மதித்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் அவர் போட்டியிடுவதற்கு சுமந்திரனின் ஆசிர்வாதம் கிடைக்காவிட்டால் ஐங்கரநேசனின் எண்ணம் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லைத்தான் .